Saturday, January 25, 2014

புரட்சிதலைவிக்கு ஒரு பகிரங்க கடிதம்

மாண்புமிகு புரட்சி தலைவி அவர்களுக்கு,
அம்மா !
சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிக்காக வாழ்வா சாவா என்ற தீவிரத்துடன் போராடிய நீங்கள் வெற்றிக்கு பிறகு அந்த வெற்றியை வழங்கிய சாமானிய தொண்டர்களையும், மக்களையும்,மக்கள் நலனையும் எப்படி எல்லாம்   புறக்கணித்தீர்கள்? ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.

அல்லும் பகலும் "உழைத்து " கடந்த ஆட்சியே மேல் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் - இருப்பதை விட்டு பறப்பதற்கு பரபரக்கிறீர்கள். இதற்கு உங்கள் "எண்ண ஓட்டம்"புரிந்த அடிப்பொடிகளும் தூபம் போட்டு வரும் வேளையில்  - பெங்களூர் வழக்கு தலை மேல் கத்தியாக தொங்கும் இந்த வேளையில்

மத்திய அரசுடனான மோதல் போக்கால் -ஈழ ஆதரவு போக்கால் கிடைத்த மைலேஜையும் முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்து தள்ளி இழந்து விட்ட இந்த நிலையில் .. இந்த பகிரங்க கடிதத்தை எழுதுகிறேன். அதற்கு முன் என்னை பற்றி சில வரிகள்.

அடிப்படையில் நான் காங்கிரஸ் எதிர்ப்பாளன் .திமுக அனுதாபி. ஆனால் எங்கள் மானிலத்தில் ஒய்.எஸ்.ஆர் அவர்களின் சக்தி வாய்ந்த தலைமை காங்கிரஸ் எதிர்ப்பை கொஞ்சம் மழுங்க செய்துவிட்டது வேறு விஷயம்.

அதே போல் கலைஞரின் குடும்ப பாசம், காங்கிரசுடனான அவரது தன்மானம் சுயமரியாதையற்ற நெடு நாள் கூட்டு,ஈழத்தமிழர்கள் பால் அவர் காட்டிய அலட்சியம் ஆகியன அவரையும் காட்டமாக விமர்சிக்க செய்ய வைத்தது வேறு விஷயம்.

தற்போதைய அவரது பி.ஜே.பி -காங்கிரஸ் எதிர்ப்பு நிலை என் மனதை கொஞ்சம் இளகச்செய்திருப்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். ( ஆனால் இவர் இந்த நிலையில் எத்தனை நாள் தொடர்வார் என்பதிலும் சந்தேகம் இருக்கிறது.)

இதை எல்லாம் நான் குறிப்பிட காரணம் நான் உங்கள் ஜால்ரா அல்ல என்பதை முதற்கண் தெளிவுப்படுத்தி விடத்தான்.

சமீபத்தில் ராஜ்ய சபா வேட்பாளர்களில் ஒருவரை மாற்றி அறிவித்துள்ளீர்கள். இந்த மாற்றங்களை  நான்  மறுபடி மறுபடி பார்க்கிறேன்.

என் ஊகம் என்னவென்றால் நீங்கள் தனித்தீவாக்கப்பட்டிருக்கிறீர்கள். இருட்டில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களை சுற்றி சுய நலமிகளும் -துரோகிகளும் மட்டுமே இருக்கிறார்கள்.

அதே நேரம் இரண்டு நபர்கள் அல்லது இரண்டு குழுக்கள்/அமைப்புகள் உங்களுக்கு  முரண் பட்ட செய்திகளை தந்து கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு பரிதாப நிலை.

உங்கள் முன் உங்களுக்கு  மீண்டும் மீண்டும் மண்டியிடும்   நபர்கள் உங்களுக்கு பின் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்டு உங்களுக்காக அனுதாபம் கொண்டேன்.

நீங்கள் என்ன மாதிரியான கையறு நிலைகளை சந்தித்து மீண்டு வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். நதியை தேடி வந்த கடலுக்கு பிறகும் - எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகும் -சேவல் புறா எப்பிசோடுக்கு பிறகும் - ஆட்சியை இழந்த பிறகும் - ஊழல் வழக்குகள் பாய்ந்த போதும் எத்தனையோ எத்தனையோ டிசாஸ்டர்ஸ். அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள்.

இதற்கெல்லாம் உங்கள்  தகுதிகள் திறமைகளை விட உங்கள் அரசியல் எதிரிகளின் தகுதியின்மையும்,திறமையின்மையுமே காரணங்களாக அமைந்துள்ளன.

ஆனால் நீங்களும் -உங்களுக்கு லாவணி பாடுபவர்களும் இந்த யதார்த்தத்தை முழுக்க மறந்து விட்டாற்போல் இருக்கிறது.

அவர்கள்  உங்களுக்கு லட்சார்ச்சனை செய்வதும். . நீங்கள் அவற்றை ரசிப்பதும்.. பார்வையாளர்களை தற்காலிக மூல நோயாளிகளாக மாற்றிவிடுகின்றன.

உங்களுக்கு பிரதமர் ஆகும் தகுதி இருக்கிறதோ? இல்லையோ? வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ?  மூன்றாம் நபராகிய நான் - எவ்வித லாப நோக்கும் இல்லாமல் பிரதமர் பதவிக்கான களத்தில் உங்கள் கைவாளாக  -குறைந்த பட்சம் கேடயமாக சுழல வல்ல ஒரு ஆயுதத்தை சபா நாயகர் அலுவலகத்துக்கு அனுப்பினேன்.
ஆம்.. அந்த வாள்  இந்தியாவின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல எனது திட்டம். .

1986 முதல் 1997 வரையிலான எனது உழைப்பில் தீட்டப்பட்ட திட்டம்.
அடுத்து என் வாழ்விலான 7 வருடங்களை தின்று விட்ட திட்டம். என்னை வறுமைக்கும் -பசிக்கும் தின்ன கொடுத்த திட்டம். அன்றைய ஆந்திர முதல்வருடன் என்னை போராட செய்த திட்டம்.
அதனை அதுவும் 234 பிரதிகளை  கூரியரில் தான்  அனுப்பினேன்.(சாதா தபாலில் அல்ல) இதற்கெல்லாம் ஒரு ரெஜிஸ்டர் போல ஏதாவது இருக்கலாம்.

அது குறித்த என் கோரிக்கைகள் மூன்று
1.மேற்படி பிரதிகளை .சட்டமன்றத்தில்  அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் கிடைக்க செய்தல்.அது குறித்து சிறிய விவாதம் நடக்குமாறு செய்தல்
2.ஒரு தீர்மானம் போடப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்புதல்
3.உங்கள்  பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் சேர்த்தல்

அரசியல் சாசனம் அந்த பதவிக்கு எத்தனை எத்தனை அதிகாரங்களை அள்ளி வழங்கியிருந்தாலும் சபா நாயகர் என்பவர் உங்கள் வீட்டுகொலு பொம்மை.
ஆனால் அந்த கொலு பொம்மைக்கு உங்கள் மீது எத்தனை அக்கறை என்றால் 2013 மார்ச்சில் அனுப்பப்பட்ட 234 பிரதிகள் பற்றிய தகவல் கூட தங்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.எம்.எல்.ஏ க்களுக்கு வழங்கப்படவில்லை. விவாதம்? தீர்மானம் ..உங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கவும் படவில்லை.

இது போன்ற பொம்மைகளைத்தான் இன்னும் உங்கள் கொலுவில் வைத்திருக்கிறீர்கள் என்பதும்அந்த பிரதிகளை சபா நாயகர் அலுவலகத்து  அதிகாரி ஒருவர் தீவிரமாக அடைகாத்து வருகிறார் என்பது மட்டும் புரிகிறது.
சரி ஒழியட்டும் .. இந்த சங்கதியை உங்கள் தனிப்பிரிவுக்கு அனுப்புகிறேன்.அவர்கள் மேல் நடவடிக்கைக்காக "கட்சி அலுவலத்துக்கு அனுப்புகிறார்கள்"

கட்சி அலுவலகமோ பொறுப்பாக யாரிடமோ கொடுத்து அடை காக்க செய்திருக்கிறது. சீக்கிரமே குஞ்சு வெளிவரும் போல.

இந்த சங்கதியை தங்களை நேரில் சந்திக்கும் "வாய்ப்பு" பெற்ற வீணை காயத்ரி அவர்களுக்கு தெரிவிக்கிறேன். அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை.
சரி ..அம்மா சிங்கம். அம்மாவின் குகையில் சிங்கங்களுக்கு மட்டுமே இடம் இருக்கும்.  அம்மாவின் இல்ல முகவரிக்கு அனுப்பினால் அம்மா பார்வைக்கு நிச்சயம் போகும்  ஏன் என்றால் அங்கு விசுவாசிகளே இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் 234 பிரதிகளை அதே கோரிக்கைகளுடன் தங்கள் இல்ல முகவரிக்கு அனுப்பினேன் ( செப்ட ,2013)

அதையும் சீண்டுவார் இல்லை. உங்கள் மூக்குக்கடியில் நடப்பதே உங்கள் பார்வைக்கு வருவதில்லை எனும் போது .. யாரோ ஒரு ராஜ்ய சபா வேட்பாளர் பற்றிய  உண்மையான தகவல் உங்களுக்கு  எப்படி கிடைக்கும்.
Really I pity of you.